பூஜ்ஜியம்

அன்று
எண்களுக்கும் 
எனக்குமிடையே
காரசார விவாதம்

பூஜ்யத்திற்கு
எதிராக
எண்களெல்லாம்
அணிதிரள

இலக்கங்கள்
விளக்கங்கள் வேண்டி
தர்க்கங்கள் செய்தன

எத்தனை பூஜ்ஜியமோ
அத்தனையும் சேர்ந்தாலும்
பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான்
பொரிந்து தள்ளியது எண்கள்

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை

திறந்த மேனியாய்
நிராயுதபாணியாய்
ஒற்றையாய் நின்ற
உயர்வுமிக்க
பூஜ்ஜியத்தை
புகழ்ந்து பேசினேன்

பூஜ்ஜியமே ..

உன் வெற்றிடமும்
எனக்கு
முழுமையாகவே
தெரிகிறது.

காலியானவன் நீ
காலாவதி ஆகாதவனும் நீ

நிறைவும் நீ
நிர்மூலமும் நீ

சூன்யம் நீ
என்றார்கள்

சூத்திரதாரியே
நீதானென்ற
சூட்சமத்தை
அறியாதவர்கள்

நீ
ஒளிவு மறைவு
இல்லாதவன்

அதனால்தானோ
உன் மதிப்பு
உலகுக்குத் தெரியவில்லை?

உள்ளொன்று வைத்து
புறமொன்று
பேசுபவர்க்குத்தானே
உலகத்தில் மரியாதை?

ஒவ்வொருத்தரின்
வெற்றிக்கு பின்னாலும்
ஒருவர் உண்டாம்

இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

ஒன்றுமே இல்லாத உன்னாலே
உயரத்தில் அவர்களை
உட்கார்த்த முடிகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அகிலத்தில் உன்னை
அறிமுகம் செய்தது
ஒரு இந்தியன்தானாம்
 
அதனாலோ என்னவோ
உன் மேல் எனக்கு
அளப்பரிய பிரியம்
 
ஆன்மீகத் தேடல்
உன்னிலிருந்தே தொடங்குகிறது
உன்னிடத்தே முடிவடைகிறது

உருவமுள்ளவனும் நீ
உருவமில்லாதவனும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ

ஆக்கமும் நீ
அழிவும் நீ

உன்னை
முற்றும் உணர்ந்தவர்கள்
சூஃபிகள் ஆனார்கள்
துறவிகள் ஆனார்கள்
முனிவர்கள் ஆனார்கள்

அறியாதவர்கள்
பூஜ்யமாகிப் போனார்கள்

உன்னிலிருந்து
பிறந்ததுதான் பிரபஞ்சம்
உன்னிலேயே
முடிவடையும் அது திண்ணம்

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு

நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?

பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?

மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது

பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது

எண்களுக்கு மாத்திரம்
நீ தொடக்கமல்ல

எல்லாவற்றிற்கும்
நீதான் தொடக்கம்
எல்லாவற்றிலும்
நீ அடக்கம்

உன்னை
சூன்யம் என்றவர்களை
சுட்டுவிடத் தோன்றுகிறது

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

நன்றி : திண்ணை (17.1.2008)

பின்னூட்டமொன்றை இடுக