நிலாவில் மனிதன்
நிலையாகி விட்டான்
முதற் காலனி
முளைத்தது
மூத்த தலைவரின் பெயர்
முறையே சூட்டப்பட்டது
எட்ட இருந்து பார்த்ததை
தொட்டுவிட்ட அவர்களை
ஆயிரமாண்டுகட்குபின்
ஆதி மனிதர்களென
வரலாற்று பக்கங்கள்
வரையறுத்து காட்டும்
நிலா புராணங்கள்
நினைவு கூறும்
நிலாவில் குடியேறிய
முதல் திங்கள் அது
நிலா மனிதர்கள்
பூமிச் சோறுக்கு
உலா போயினர்
அன்று ..
சித்ரா பௌர்ணமி
அங்கிருந்து கொணர்ந்த
அவர்களின் பஞ்சாங்கம்
அம்புலி கணக்கை
அளந்து காட்டியது
ஆஹா .. ..
அகன்ற வட்டமாய்
அற்புத காட்சி தந்தது
அந்த அழகிய பூமி
நிலாவுக்கு ஏற்பட்ட
அதே களங்கம்
பூமிக்கும்
புத்தம் புது அனுபவம்
புளகாங்கிதம் அடைந்தனர்
புது உலகத்து மனிதர்கள்
பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு
அது ஒரு
நிலாக்காலம்
அங்கு விளையாடிய
அதே விளையாட்டை
இங்கும் ஆடினர்
இளஞ்சிறார்கள்.
அவர்கள் ஓட
அது ஓடியது
அது ஓட
அவர்கள் ஓடினர்
தொட்டில் குழந்தைகள்
தாய்மார்களiன் இடுப்புக்கு
தொற்றிக் கொண்டனர்
பூமியைக் காட்டியே
தொண்டைக்குள்
திணித்தனர் கவளங்களை
பூளோக ரம்பைக்கு
புடவை கட்டி பார்க்க
புதுக்கவிஞர்கள் புறப்பட்டனர்
ஆடை கட்டி
வந்த நிலவோ என
அழகு பார்த்தவர்களாயிற்றே?
நிலவைப்பாடி
நீர்த்துப் போன இவர்கள்
புதிய
உவமையையும்
உவமேயத்தையும்
உற்சாகமாகத் தேடினர்
இத்தனை நாள்
தாயாக இருந்த பூமி
இரவோடு இரவாக
இளமையாகிப் போனாள்
ஆம் … ..
பூமித்தாய்
பூமிக்கன்னியானாள்
மாறாக
நிலவுக் கன்னி
பொறுமையின் படிமம் ஆனாள்
காதலர்கள்
பூமியின் பொலிவை
கற்பனை கோர்த்து
கன்னியரை
வருணனை செய்தனர்
காதல் யுக்திக்கு
ஒரு புதிய
கிரியா ஊக்கி
நிலா நிலா ஓடிவா என்ற பாடல்
நர்ஸரி பாடத்திட்டத்தில்
நீக்கப்பட்டது
நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
வானொலியில் ஒலிபரப்ப
தடை செய்யப்பட்டது
நிலா அது
வானத்து மேலே
பொருந்தாத பாடல்களென
பத்திரிக்கைகள் விமர்சித்தன
புராணக் கதைகள்
திருத்தப்பட்டன
சந்திரனை
பாம்பு விழுங்கிய
பக்கங்களை தீயிலிட்டனர்
எங்கு நோக்கினும்
ராகு கேதுவுக்கு
எதிரான கோஷங்கள்
ஆம்ஸ்ட்ராங்குக்கு
ஆங்காங்கே
கோயில்கள்
அவன் திருவடி
பதித்த இடம்
பொற்பாதக்
கோவிலானது
சந்திர உடைகளில்
மந்திரம் கூறி
புரோகிதர்கள்
பூஜைகள் செய்தனர்
மூத்த குடியினருக்கு
முதல் மரியாதை
தந்தனர் அந்தணர்
அர்ச்சனைகள்
ஆம்ஸ்ட்ராங்கின் தாய்மொழி
ஆங்கிலத்தில் மட்டுமென
அறிவிப்பு வந்தது
மதவாதிகளும்
மிதவாதிகளும்
சரிபாதி பிரிந்தனர்
பகுத்தறிவு
பாசறைகள்
பரவத் தொடங்கின
வந்த இடத்திலும்
வருணாசிரமமா? என
வாதங்கள் எழுந்தன
அமரத்துவம் எய்திய
ஆம்ஸ்ட்ராங்
ஆங்கிலம் அன்றி
அனைத்தும் அறிந்தவன்
உயர் தமிழிலும்
ஒலிக்கட்டும் அர்ச்சனை
உரிமைக்குரல் ஒலித்தது
அர்த்தம் தொனிக்கும்
தர்க்கங்கள் பிறந்தன
ஆம்ஸ்ட்ராங்
வாகனம் ஏறி
வீற்றிருக்கும்
விக்கிரகங்கள்
நிலாவில் வந்தது
வீதி உலா
யுகங்கள்
நகர்ந்தன
காலங்கள் மாற
காட்சிகள் மாறின
பூமியோடு ஒருநாள்
போர் மூண்டது
அயல் கிரகத்து
அந்நிய செலவாணி
அடியோடு நிறுத்தப்பட்டது
பூமி புத்திரர்களின்
சகவாசத்தை
பூண்டோடு வெறுத்தனர்
தேச விரோத சக்திகளென
சிலரது சிலைக்கு
சேதம் விளைவித்தனர்
சுதேசி பொருட்களுக்கு மாத்திரம்
சுதந்திரம் தரப்பட்டது
சந்திர புத்திரனாய் இரு
சந்திர பொருள்களையே வாங்கு
சந்திர சந்து பொந்துக்களiல்
சபதங்கள் ஒலித்தன
அதோ
புகைக்கு நடுவே
பூமிவாசியின் கொடும்பாவி
பாதியாய் பாவமாய்
பற்றி எரிந்தது
பூமியிலிருந்து புறப்படும்
வான ஊர்திகளை
வானிலேயே கடத்துவோமென
தீவிரவாதிகள்
தேதி குறித்தனர்
சாதிகள் ஒழிக்க
சங்கங்கள் பிறந்தன
ஆதிகுடிகளுக்கே
முன்னுரிமை என்று
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன
புதிதாய் வந்த
குடியேறிகளுக்கு
தேநீர்க் கடைகளில்
தகரக் குவளைகள்
விகாரமாய் தொங்கின
நிலாக்கிணறுகளில்
தண்ணீர் அவர்களுக்கு
தர மறுக்கப்பட்டது
அவர்கள்
புதைக்கவும்
எரிக்கவும்
புறநகருக்கு ஓடினர்
கவிஞர்களின்
புரட்சிக் கவிதைக்கு
புதிய தீனீ கிடைத்தது
சமுதாய மறுமலர்ச்சிக்கு
சரமாரி கவிதைகள்
சளைக்காமல் எழுதினர்.
பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு
அது ஒரு
நிலாக்காலம்
adhitha karpanai thaan_– athuvum nadakumendaral namallam koduthuvai thavarkaal
namum vundu nam kolanthaikum nallavalaiyaa endraa ootri veitroom nellaa sotrai
வருணாசிரமம் சந்திரனுக்குப்போனதாக கற்பனை செய்திருப்பது தாக்கத்தின் ஆழத்தைக் காட்டுவதானால் சரி.வெறுப்பைக்காட்டுவதானால் வருத்தம்தான்!