பம்பரக்கோனே !

நன்றி : திண்ணை

– அப்துல் கையூம்

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.

அன்றைய காலத்தில் எல்லோரையும் முமுணுக்க வைத்த பாடல் அது. திரையில் அவர் பம்பரமாகச் சுழன்று ஆடிய லாவகமும், அந்த பாடலுக்கு மேலும் பன்மடங்கு மெருகூட்டியது எனக் கூறலாம்.

“வாள்விழி” “வேல்விழி” “மான்விழி” “மீன்விழி” என்று கண்களை வருணிக்கும் பாடல்கள் வெளிவந்த நேரத்தில் “பம்பரக் கண்ணாலே” என்ற மாறுபட்ட வருணனையுடன் கூடிய பாடல் என்பதாலோ என்னவோ அது ரசிகர்கள் மனதை சுற்றிச் சுழல வைத்தது.

“பம்பரக் கண்கள்” – ஆழ்ந்து சிந்தித்தால் அருமையானதொரு வருணனை. நாணத்துடன் நோக்கும் மங்கையின் பார்வை தாழ்ந்தே இருக்குமாம். ஆனால் காதல் ஜுரம் ஏற்பட்ட கண்கள் இருக்கிறதே அதில் ஒருவகையான மருட்சி தென்படும். அங்கும் இங்கும் பம்பரமாகச் சுழலும். நாலாப்புறமும் பார்வைகள் சுழன்று செய்வதறியாது திண்டாடும்.

தலைவனைப் பார்ப்பதா அல்லது தரையைப் பார்ப்பதா? விண்ணைப் பார்ப்பதா அல்லது வேறு எதையாவது பார்ப்பதா? என்ற குழப்பம் நிலவும். வட்டமடிக்கும் விழிகள் கொட்டமடிக்கும். அந்த ‘பம்பரக் கண்கள்’ காண்போரின்  மனதையும் ஈர்த்து அவர்களையும் பம்பரமாகச் சுழல வைக்கும்.

இத்தனை ஆண்டுகட்குப்பின் மறுபடியும் ஒரு பம்பரப் பாடல் :

“பம்பரக் கண்ணாலே
பச்சைக் குத்த வந்தாலே”

நம்மை முணுமுணுக்க வைத்திருக்கிறது. பச்சைக் குத்தினால் அது அழிவதில்லை. நிரந்தரமாக நிலைத்து விடும். சில நினைவுகளும் அப்படித்தான்.

பால்ய வயதில் விளையாடிய பம்பர விளையாட்டு ‘பசுமரத்தாணி’யாக என் இதயத்தில் பச்சை குத்தப் பட்டிருக்கிறது. விளையாட்டில் தோற்றுப்போகையில், மொழுக்கென்று சாயம் பூசப்பட்ட எனது புத்தம்புது பம்பரம் வாங்கும் ஒவ்வொரு ‘ஆக்கர்’ குத்தும் என் பச்சிளம் மனதில் பேரிடியாக இறங்கும்; பனித்துளியாய் கண்ணீர்க் கசியும்.

வட்டத்துக்குள் குற்றுயிரும் குலையுயிருமாய் அடிபட்டுக் கிடக்கும் பம்பரம் என்னுள் ஒரு கலவரத்தையே உண்டு பண்ணிவிடும். பம்பரத்தில் வடுக்களாய் பதிந்துவிட்ட அம்மைத் தழும்புகளை ஆறுதலாகத் தடவிக் கொடுக்கையில் வேதனை பீறிட்டெழும்.

இதுபோன்ற அரிய அனுபவம் பிற்காலத்தில் ‘எதையும் தாங்கும் இதயமாக’ நம்மை புடம் போட வைக்கிறது. ஒருவித வைராக்கியத்தையும், தன்னம்பிக்கையையும் நமக்குள் ஏற்படுத்தி உண்டுபண்ணி எதிர்நீச்சல் போடவைக்கிறது. 

பம்பரத்தில்தான் எத்தனை வகைகள்? எத்தனை நிறங்கள்? எத்தனை வடிவங்கள்?

கொண்டையாணி அடிக்கப்பட்ட பம்பரங்கள் ‘கும்’மென்று சுழல்கையில் அந்த ரீங்காரம் காதுகளில் கல்யாணி ராகம் பாடும். கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு ஆஜானுபாகுவான உடலழகோடு, இரைச்சலை வரவழைத்துக் கொண்டு ‘விளாம்பழ பம்பரம்’ சுற்றுகின்ற அழகே தனி.

“அபீட்” என்று ஆனந்தக் கூத்தாடி; சுற்றுகின்ற பம்பரத்தை அப்படியே அலக்காக சாட்டையால் வாரி எடுத்து; உள்ளங்கை கூச சுழல விட்டு வேடிக்கை பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்?

‘ஜாய் ஸ்டிக்’கும் ‘கம்ப்யூட்டர் மவுசு’மாக அலையும் என் குழந்தைகளுக்கு இந்த இனிய பம்பர அனுபவம் கிடைக்காமல் போய்விட்டதே என்று கவலை பட்டதுண்டு.

திறந்தவெளி மைதானங்களில் கோலி, கில்லி, பம்பரம் போன்ற விளையாட்டில் காணும் மட்டற்ற மகிழ்ச்சி ‘கான்கிரிட் காடு’களில், அடுக்குமாடி குடியிருப்பு வாழும் குழந்தைகளுக்கு  எங்கே கிடைக்கிறது?

முகம் எனக்கு தெரியாது.
உன்
முகவரியும் தெரியாது.
ஆனால்
பம்பரம் சுற்றும்
நாளிலிருந்து
உன்னைத்தான்
சுற்றி வருகிறேன்

என்ற மு.மேத்தாவின் வரிகள் நினைவுக்கு வருகிறது. என்னைப் போல் இவரும் ஒரு பம்பரப் பைத்தியமோ? அனுபவங்கள் தானே கவிஞனின் சிந்தனைக்கு மூலதனம்.

கற்கால மனிதனின் முதல் விளையாட்டுச் சாதனம் பம்பரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இது அகழ்வாராய்ச்சி நமக்கு எடுத்துக் காட்டும் ஆதாரம்.  பாபிலோன், மொஹன்ஜதாரோ, ஹரப்பா ஆகிய அனைத்து நாகரிகத்திலும் இது நமக்கு காணக் கிடைக்கிறது.

இன்றும்கூட இந்த பம்பரத்தைத்தான் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியின் தொப்புளில் சுழல விட்டு தன் பரிணாம வளர்ச்சியின் தெளிவான சங்கிலித் தொடரை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறான்.

பம்பரத்தின் புறத்தோற்றம் மாறி இருக்கலாம். மேலே அகன்று கீழே குறுகியிருக்கும் அதன் அகத்தோற்றம் மற்றும் மாறவேயில்லை.

ஆணியின் நுனியில் ஆடுகின்ற மரத்தால் ஆன பம்பரத்தின் சுழற்சியின் கவர்ச்சி, ஒளிபுகும் தோற்றத்தில் ‘மினுக் மினுக்’ விளக்குடன் சுழலும் நவீன பிளாஸ்டிக் பம்பரத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

சுருங்கச் சொன்னால் சாட்டை பம்பரத்தில் கிடைக்கப்பெறும் பரவசம், சாட்டையிலா எலக்ட்ரிக் பம்பரத்தில் கிடைப்பதில்லை.

சூதாட்டத்திற்கும், சோதிடத்திற்கும் காலங்காலமாய் பம்பரம் ஒரு  முக்கியக் கருவியாகத் திகழ்ந்து வருகிறது.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ‘ஜூனியர் விகடனில்’ எழுதிய ‘பம்பர ஞானம்’ என்ற கட்டுரை என்னைப் பாதித்திருக்கிறது.

ஒரு ஆப்பிள்; நியூட்டனுக்கு அறிவுறுத்தியதைக் காட்டிலும், ஒரு நீராவிப் பாத்திரம்; ஜேம்ஸ் வாட்டிற்கு உணர்த்தியதைக் காட்டிலும், சாதாரண பம்பரம் ஒரு மனிதனுக்கு போதிமரச் சிந்தனையை போதிக்கும் தன்மை வாய்ந்தது.  
பம்பரச் சுழற்சியை பக்குவ மனதுடன் பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான் என்பது என் எண்ணம்; அது திண்ணம்.

அண்டத்தின் சுழற்சியையும், அலைகடலின் சுழற்சியையும் பறைசாற்றும் அற்புதச் சாதனம் பம்பரம் என்றால் அது மிகையாகாது.

எல்லாவற்றிற்கும் தொடக்கமாக இந்த பம்பர விளையாட்டை முதன் முதலில் ஆடியவன் இறைவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஞாலத்தையும், காலத்தையும், கோளத்தையும் பம்பரமாய் சுழல விட்டது அவன்தானே? 

“அவனன்றி அணுவும் அசையாது” என்ற தத்துவத்தை இந்த பம்பர ஞானம் நமக்கு உணர்த்துகிறது. 
 
ஓய்வின்றி உழைத்தால் தன் சொந்தக் காலில் தனித்து நிற்க முடியும் என்ற தாரக மந்திரத்தை அது கற்பிக்கிறது.

சுழற்சியின் போது, பிரிந்திருக்கும் வெவ்வேறு நிறங்களும் ஒன்றிணைந்து கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் உன்னத இயக்கம் இது.

ஆட்டத்தின் இறுதியில் ஆடி ஓடி, தட்டுத் தடுமாறி விழும் அந்த வீழ்ச்சியும் ஒரு படிப்பினையைத் தருகிறது.

“ஆடிய ஆட்டமென்ன”

என்ற கண்ணதாசனின் காவிய வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

இன்றைய இயந்திர உலகில் வாழ்க்கையே ஒரு பம்பரச் சுழற்சியாகவே ஆகி விட்டது. “நலம் நலமறிய ஆவல்” என்றிருந்த ரத்த பந்தம் “பணம் பணமறிய ஆவல்” என்றாகி விட்டது.  

ராமன் கிழித்த கோட்டை சீதை தாண்டியிருக்காவிட்டால் ராமாயணமே இருந்திருக்காது என்பார்கள். வேறொரு கோணத்தில் சிந்தித்தால் பலராமன் பால்யவயதில் பம்பரம் ஆடியிருக்கா விட்டால் அவன் காட்டுக்கு போயிருக்கவே வேண்டியிருக்காது.

ராமன் சுழற்றிய பம்பரம் கூனிக்கிழவி சுமந்து வந்த கஞ்சிக் கலயத்தை பதம் பார்த்துவிட,  துளை ஏற்பட்டு  முழுதும் சிந்தி விட்டது. ராமனும் அவன் கூட்டாளிகளும் எக்காளமிட்டு கேலியாகச் சிரிக்க அது கூனிக்கிழவிக்கு சொல்லவொணா அவமானத்தை உண்டு பண்ணி விடுகிறது.  கைகேயிடம் சென்று ராமனுக்கு பதில் பரதனுக்கு முடிசூட்டு விழா செய்ய வேண்டும் என்று செல்லுமளவிற்கு ஒரு பழிக்குப் பழி உணர்வை அவள் மனத்தில் ஏற்படுத்துகிறது.

சித்தர்களும், மஸ்தான்களும் பாடிய ஞானப்பாடல்களில் இறைவனை “பம்பரக்கோனே” என்று விளிப்பதைக் காண முடிகிறது. கோன் என்றால் அரசன். பம்பரத்தை ஆட்டுவிக்கும் அரசன் அவன்தானே? பம்பரத்தின் சுழற்சியின் வேகமும், லாவகமும் அதை ஆட்டுவிப்பவன் கையில்தான் இருக்கிறது.

“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா”

கண்ணதாசனின் வரிகள்தான் எத்தனை கருத்தாழம்?

பம்பரஞானம் – சிந்தைக்கினியது. விந்தைக்குரியது.

vapuchi@hotmail.com

1 Comment

  1. படித்தேன் ! வியந்தேன் !! ஒரு சாதாரண பம்பரத்திற்கு இவ்வளவு அர்த்தங்கள் கற்பிக்க முடியுமோ , யாராலும் முடியாது
    அதனால் தான் கவிஞர் கையூம் அவர்களால் முடிந்ததோ !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s