யூசுப் ரஹ்மத்துல்லா சேட்

18.09.2007

ஒப்பில்லா ஓர் இறையின் திருப்பெயரால் …

அன்பிற்கினியீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..  நெஞ்சம் நிறைந்த நல்லாசிகள்.

தாங்கள் எழுதிய கவிதை நூல்கள் இரண்டும் படித்து மகிழ்ந்தேன். உங்கள் புலமையான வரிகள் எனக்கு வியப்பையோ ஆச்சரியத்தையோ சற்றும் அளித்திடவில்லை.

இது புலவர் கோட்டை. நாகூரின் அற்புதம். பெரும் புலவர் வா.குலாம் காதிர் நாவலனாரும் அவரின் சமகால பெரும் புலவர்களும், குறிப்பாக மு.மு.யு.முகம்மது நெய்னா மரைக்காயரும், நாகூர் மண்ணில் படைத்துச் சென்றிருக்கும் தமிழ்ப் புலமையும், கவிதைகளும் புதையலாக இப்பூமியில் தோண்டத் தோண்ட வந்துக் கொண்டே இருக்கும்.

தங்களின் “அந்த நாள் ஞாபகம்” கவிதை நூலில் :

“ஒற்றையிலே போகாத
மாதர் பிராட்டி
உடற்மறைக்க அணிகின்ற
வெண் துப்பட்டி

உற்றவரின் துணையோடு
வெளியே செல்லும்
உயர்ந்த கலாச்சாரத்தின்
உறைவிட மன்றோ..?”  – என்று கூறியுள்ளதும்,

“கற்றவரும் பின்பற்றும்
கோஷா ஒழுக்கம்” –  என்று குறிப்பிட்டிருப்பதும்,
பாட்டுக்கும், புகழுக்கும் தங்களின் இஸ்லாமிய ஞானத்திற்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

அந்த நாள் நாகூர் கால சூழ்நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். இத்தாலியரின் ஆட்டுக்கால் சூப்பையும், ஆட்டிறைச்சி “சாப்ஸ்”ஸின் ருசியையும், பாஜிலால் சாஹிபின் ஆஷுரா பஞ்சா கேளிக்கையையும் எழுதி இருக்கலாம்.

இந்த கவிதை நூலை நீங்கள் இன்னும் சிறப்பாக நம் மக்களுக்கு நீங்கள் வழங்க வேண்டுமென்பது எனது ஆசை. இந்த நூலின் மறுபதிப்பில் நான் எழுதி இருப்பவைகளையும், விடுதலை இயக்கப் போராட்ட மாவீரர் தியாகி M.E.நவாப் சாஹிப் மரைக்காயர் அவர்களின் தியாகத்தையும், தனது வாழ்நாள் முழுதும் நகராட்சி உறுப்பினராக இருந்து மக்கள் பணி புரிந்த மா.சூரிய மூர்த்தி செட்டியாரையும், பிரான்ஸ் காலனி காரைக்காலிலிருந்து ஜப்பான் சில்க்குகள் கடத்தப்பட்டு 5000 பியூஜி சில்க்குகளும் 8 அணாவும், கிரேப் சில்க் பூட்டா சேலை ரூபாய் 4.50 க்கும் விற்பனைச் செய்யப்பட்டதையும் சேர்த்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழவும், பல கவிதை நூல்கள் படைத்து வெளியிடவும் எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனைச் செய்கிறேன்.

‘ஜெய்ஹிந்த்’

இவண்

தங்கள் வளம் நாடும்

மு.யூசுப் ரஹ்மத்துல்லா சேட்
(சமூக நல ஊழியன்)

12/6, சுப்பு செட்டி தெரு
நாகூர் – 611002

(நாகூரின் மூத்த குடிமகன்களில் ஒருவரான ஜனாப் M. யூசுப் ரஹ்மத்துல்லா சேட் பழம்பெரும் காங்கிரஸ்வாதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவரது தேசிய உணர்வு கடிதத்தை முடித்திருக்கும் விதத்தில் நன்கு புலப்படுகிறது)

பின்னூட்டமொன்றை இடுக